ரஷ்ய படையெடுப்பு காரணமாக கடந்த 5 வாரங்களாக தனது குழந்தைகளைக் கூட பார்க்கவில்லை என்று உக்ரைனிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba), நேற்று பிரபல ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், போரின் உணர்ச்சி மற்றும் உளவியல் தாக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
அவர் கூறியதாவது, “ரஷ்ய தாக்குதல்கள் உக்ரைனில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றுள்ளன. 5 வாரங்களாக நான் எனது சொந்தக் குழந்தைகளைப் பார்க்கவில்லை. எப்போதாவது நான் அவர்களுடன் தொலைபேசியில் பேசுகிறேன். என்னிடம் இரண்டு நாய்கள் உள்ளன, அவற்றையும் பார்க்கவில்லை. இது வெட்கக்கேடானது; இது பேரழிவை ஏற்படுத்துகிறது” என்று குலேபா கூறினார்.
ரஷ்யா மீதான தடைகள் குறித்து பேசுகையில், ஏற்கெனெவே நிறைய தடைகள் செய்யப்பட்டுள்ளது, ஆனால் “போர் தொடரும் வரை, இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
மேலும் “நாங்கள் (உக்ரைன்) வரலாற்றின் வலது பக்கத்தில் இருக்கிறோம். எங்கள் உரிமைகளைக் கோர எங்களுக்கு உரிமை உள்ளது,” என்று கூறிய அவர், தனது நாடு எந்த நிலையிலும் போராட வேண்டும், “இந்தப் போரில் தோற்றுப்போக எங்களுக்கு உரிமை இல்லை” என்று அவர் கூறினார்.
“ரஷ்யாவின் ஆக்கபூர்வமான வார்த்தைகள் ஆக்கபூர்வமான நகர்வுகளுடன் பொருந்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் வரலாற்றின் வலது பக்கத்தில் இருக்கிறோம். நாங்கள் யாரையும் ஆக்கிரமிக்கவில்லை. போர் ஓரிரு நாளில் முடிந்துவிடும் என்ற ஆரம்ப அனுமானம் தவறாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது, நாங்கள் இரண்டாவது மாதத்தில் இருக்கிறோம்,” என்று குலேபா கூறினார்.