டெல்லி: எரிபொருள் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் 3 கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டம் ஏற்பாடு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் மோடி அரசால் வஞ்சிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ளனர் என காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார். எரிபொருள் விலையேற்றம் குறித்த விஷயத்தில் காது கேளாதது போல செயல்படும் பாஜக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, அவர்களின் வீடுகள் மற்றும் பொது இடங்களுக்கு வெளியே கேஸ் சிலிண்டர்களுக்கு மாலைகள் அணிவித்தும், மேளம் மணிகள் போன்ற பிற இசைக்கருவிகளை அடித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என கூறினார். ஏப்ரல் 7 ஆம் தேதி, மாநிலத் தலைமையகத்தில் மாநில அளவிலான தர்ணா போராட்டம் நடைபெறும் எனவும், சிம்லாவில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்வார் என தெரிவித்தார்.