புது டில்லி: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கான தேவை உலக சந்தையில் குறைந்ததால், இந்தியாவுக்கு பேரல் ஒன்றுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் வழங்க முன் வந்துள்ளது.
தற்போது இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றின் விலை 107 டாலராக உள்ளது. ரஷ்யா உக்ரைனுக்குள் ஊடுருவிய பிப்., 24க்கு முன் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 94 டாலராக இருந்தது. தாறுமாறான விலையேற்றத்தால் இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. விலையை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் பைடன் நாளொன்றுக்கு 10 லட்சம் எண்ணெய் பேரல்களை இருப்பிலிருந்து வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆசியாவின் 2வது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, சர்வதேச அழுத்தத்தையும் மீறி ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை இருமடங்காக்கியுள்ளது. மேலும் இந்தியாவின் இறக்குமதியை ஊக்குவிக்க ரஷ்யா தனது யுரல் கச்சா எண்ணெய்க்கு பேரலுக்கு 35 டாலர் தள்ளுபடி வழங்குகிறது. இந்தாண்டு 1.5 கோடி பேரல்கள் எண்ணெயை இந்தியா வாங்க வேண்டும் என ரஷ்யா விரும்புகிறது. மேலும் அரசு மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடர்கிறது.
Advertisement