புதுடெல்லி: கடும் எதிர்ப்பையும் மீறி சார்டர்ட் அக்கவுன்டன்ட் மசோதா மக்களவையில் நிறைவேறியது. சார்டர்ட் அக்கவுன்டன்ட் சட்டம் 1949, காஸ்ட் அண்ட் வொர்க் அக்கவுன்டன்ட் சட்டம் 1959 மற்றும் நிறுவன செயலர் சட்டம் 1980 ஆகிய மூன்றிலும் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதாவை நிறுவன விவகாரத்துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதில் ஐசிஏஐ அமைப்பின் ஒழுங்குமுறை கமிட்டியில் ஐந்து உறுப்பினர்கள் இடம்பெறுவர் என்றும் அவர்களில் மூன்று பேர் பட்டய தணிக்கையாளர் அல்லாத உறுப்பினர்கள் இடம்பெறுவர் என திருத்தம் செய்யப்பட்டதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததோடு இதை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என வலியுறுத்தினர். ஒழுங்குமுறை குழுவின் தலைவராக நிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலர் தலைவராக இருப்பார் என்ற விதி மாற்றத்துக்கு அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன்சவுத்ரி பேசுகையில், ஒழுங்குமுறை நடவடிக்கை மற்றும் நிர்வாகவியல் செயல்பாடுகளில் எப்படி பட்டய தணிக்கையாளர் அல்லாதஒருவர் தலைவராக இருப்பது சரியாக இருக்கும் என்று புரியவில்லை என்று வாதிட்டார்.
ஏற்கெனவே 3 குழுக்கள் உள்ள நிலையில் மேலும் ஒருஒருங்கிணைப்புக் குழு அமைப்பதற்கான அவசியம் என்ன என்று அவர் கேள்வியெழுப்பினார். நிறுவன விவகாரத்துறை அமைச்சக செயலர் இக்குழுவுக்கு தலைவராக இருப்பது என்பது மிகப்பெரும் இடைவெளியை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் இந்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
– பிடிஐ