புது டில்லி: சமூக ஊடகங்கள், கொள்கை மீறல் காரணமாக பயனர் ஒருவரின் கணக்கை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ முடக்க முடிவு செய்தால், பயனர் தரப்பு பதிலளிக்க நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும் இல்லையெனில் அது ஐ.டி., சட்ட விதிமீறல் என வழக்கு ஒன்றில் மத்திய அரசு தெரிவித்தது.
டுவிட்டர் பயனர் ஒருவர் அந்நிறுவனம் விதிகளை மீறி தனது கணக்கை நீக்கியதாக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பிப்., 24, 2022 அன்று முன்னர் தடை செய்யப்பட்ட கணக்கை போன்றதொரு கணக்கை தொடங்கியதாக கூறி டுவிட்டர் தனது கணக்கை நீக்கியது. எனது தரப்பை கேட்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறியிருந்தார்.
அம்மனு மீதான விசாரணைக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது: டுவிட்டர் போன்ற முக்கியமான சமூக ஊடக இடையீட்டாளர்கள் ஒரு பயனரின் கணக்கை கொள்கை மீறல் காரணமாக தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் நீக்க முடிவு செய்யும் போது, பயனர் தரப்பை சொல்ல நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும். பாலியல் பலாத்காரம், ஆபாச படங்கள், சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்கள், தீங்கிழைக்கும் மென்பொருள்கள், பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட விவரங்கள் கொண்ட கணக்குகள் இதில் விதிவிலக்கானவை. அவற்றை உடனே முடக்கலாம்.
ஒரு சமூக ஊடக இடையீட்டாளர் மேற்கூறியவற்றுடன் இணங்க தவறினால் அது ஐ.டி., விதிகள் 2021ஐ மீறுவதாகும். சமூக ஊடக தளங்கள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளான கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். கணக்கையே முற்றிலுமாக நீக்கக்கூடாது. அது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும். குடிமக்களின் உரிமைகளை சமூக ஊடக கொள்கை என்ற பெயரில் மீறுவதற்கு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு கூறியுள்ளது.
Advertisement