பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்துன் எஸ்எஸ்எல்சி பொது தேர்வெழுத அனுமதித்த 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி களில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளை அந்த நிர்வாகங்கள் அனுமதிக்கவில்லை. இந்து மாணவர்களும் காவி துண்டு அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வந்தனர். அவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப் பட்ட தடையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பங்கேற்க கர்நாடக அரசு தடை விதித்தது. இதனால் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவிகள் தேர்வை புறக் கணித்துள்ளனர்.
இந்நிலையில், சில பள்ளிகளில் ஹிஜாப்புடன் மாணவிகள் தேர்வெழுதியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தர விட்டது. இதன்பேரின் நடத்தப்பட்ட விசாரணையில் கதக் மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளில் மாணவி கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது கண் டறியப்பட்டது.
இதற்கு காரணமான 2 தேர்வு பார்வையாளர்கள் மற்றும் 7 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட துணை முதன்மை கல்வி அதிகாரி பசவலிங்கப்பா தெரிவித்துள்ளார். முன்னதாக பெங்களூருவில் தேர்வறையில் ஹிஜாப் அணிந்திருந்ததாக நூர் பாத்திமா என்ற ஆசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.