திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த கே.வி.புரம் மண்டலம், ஓட்டிபள்ளியை சேர்ந்தவர் ரெட்டி குமார் (வயது 20). தச்சு தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் அங்குள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ரெட்டி குமாரும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் ஒட்டிபள்ளியை சேர்ந்த நாகேந்திரா என்பவர் கல்லூரி மாணவியை திருமணம் செய்ய விரும்பினார். இதுகுறித்து மாணவியிடம் நாகேந்திரா தனது விருப்பத்தை தெரிவித்தார். அப்போது மாணவி ரெட்டிகுமாரை காதலிப்பதாக தெரிவித்தார். இதனைக் கேட்டு நாகேந்திரா ஆத்திரம் அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரெட்டி குமார் திருப்பதியில் வேலைக்கு சென்று இருந்தார். அங்கு சென்ற நாகேந்திரா அவரது நண்பர் பிரதாப்புடன் ரெட்டி குமாரை அழைத்துக் கொண்டு ஏர்பேடு அருகே உள்ள ஏரிக்கரைக்கு சென்றனர். அங்கு 3 பேரும் சேர்ந்து மது அருந்தினர். அப்போது நாகேந்திரா, ரெட்டி குமாரிடம் தான் கல்லூரி மாணவியை திருமணம் செய்ய விரும்புவதாகவும், காதலை கைவிட வேண்டும் என கூறினார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரா அவரது நண்பர் பிரதாப் இருவரும் சேர்ந்து நைலான் கயிற்றால் ரெட்டி குமார் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் சென்றுவிட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் வாலிபர் ஒருவர் எரிக்கப்பட்டு இருப்பது கண்டு ஏர்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து நாகேந்திரா, பிரதாப் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.