மாநிலங்களவை உறுப்பினர்கள் ப.சிதம்பரம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிகேஎஸ் இளங்கோவன், நவநீத கிருஷ்ணன், ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட 72 எம்,பி-க்களின் பதவிக்காலம் ஜூலைக்குள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இவர்களுக்கான பிரிவு உபசார விழா இன்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது ஓய்வுபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவும், பிரதமர் மோடியும் பிரியாவிடை கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அதிக அனுபவம் இருக்கிறது. சில சமயங்களில் கல்வி அறிவை விட அனுபவத்திற்கு அதிக சக்தி உண்டு. எம்.பி-க்கள் தங்களின் அனுபவங்களை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். தங்களின் அனுபவம் மூலம் அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டும். ஓய்வுபெறும் உறுப்பினர்களை ‘மீண்டும் வாருங்கள்’ என்று கூறுகிறோம். புதிய உறுப்பினர்கள் பழைய உறுப்பினர்களின் மரபை கற்றுக்கொண்டு, அதை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஓய்வு பெறும் எம்.பி-க்கள் அனுபவத்தை நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும்” என்றார்.