திருவனந்தபுரம்:
கேரளாவில் பழ வகைகளில் இருந்து குறைந்த போதை தரும் மது வகைகளை தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதுதொடர்பாக ஆலோசிக்க முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் புதிய மது கொள்கைக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. புதிய மது கொள்கையில் கேரளாவில் மது தேவை அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
எனவே இந்த தேவையை ஈடுகட்டும் வகையில் கூடுதல் மது உற்பத்தி ஆலைகள் அமைக்க அனுமதி வழங்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மது தயாரிப்பு ஆலைகளில் குறைந்த போதை தரும் மதுவை பழங்களில் இருந்து தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி முந்திரி, பலா, அன்னாசி மற்றும் வாழை பழங்களில் இருந்து குறைந்த போதை தரும் மது தயாரிக்க அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மது உற்பத்தியை அதிகரிக்கும்போது அதற்கேற்ப சில்லரை விற்பனை கடைகளையும் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதுதவிர ஐ.டி. நிறுவனங்களில் பார் மற்றும் ஒயின் பார்லர்கள் நடத்தவும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறைந்தது 10 ஆண்டு அனுபவமுள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கே இந்த அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.