சத்குரு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள்ள வீடியோவில், “திருப்பூர் குமரன் என்று அழைக்கப்படும் குமாரசாமி முதலியார் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
இந்திய நாட்டின் சுதந்திர போராட்டம் தீவிரம் அடைய ஆரம்பித்த காலத்தில் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அப்போராட்டங்களில் ஆர்வத்துடன் திருப்பூர் குமரன் பங்கேற்றார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தி தொடர்ந்து மக்களை திருப்பூர் குமரன் கவர்ந்து கொண்டு இருந்தார்.
இதில் காந்தி கைது செய்யப்பட்டபோது, திருப்பூரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற குமரன், சுப்ரமணிய பாரதியின் ‘அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பது இல்லையே’ தேசப் பற்று பாடல்களை பாடி கொண்டே, நம் இந்திய தேசிய கொடியையும் கரங்களில் ஏந்தி இருந்தனர்.
அப்போது, பிரிட்டிஷ் காவல்படை நடத்திய தாக்குதலில் திருப்பூர் குமரன் தலையில் அடிப்பட்டு கீழே சரிந்தார். அந்த நிலையிலும் அவர் நம் இந்திய தேசிய கொடி அவர் கரங்களில் இருந்து நழுவாமலும், தரையை தொடாமலும் காத்து நின்றார்.
அதற்கு மறுநாள் அவர் தனது 27-வது வயதில் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார். இதன்காரணமாக, அவர் இன்றும் கொடி காத்த குமரன் என்றே அழைக்கப்படுகிறார். இந்த நிகழ்வு திருப்பூரில் நொய்யல் ஆற்றங்கரைக்கு அருகே தான் நிகழ்ந்தது. அந்த நொய்யல் நதி ஈஷா யோகா மையத்திற்கு அருகில் தான் ஓடி கொண்டு இருக்கிறது. அதனால், கொடி காத்த குமரன் எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்” என்று அந்த வீடியோ பதிவில் சத்குரு பேசியுள்ளார்.