பிரசவத்தின்போது கர்ப்பிணி உயிரிழக்க, சிகிச்சையளித்த பெண் மருத்துவர் மீது காவல்துறை கொலை வழக்குப்பதிவு செய்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டார். இன்று வழக்குப்பதிவு செய்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியும் மாற்றப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டம் லால்சொட் பகுதியில் மருத்துவர் அர்ச்சனா ஷர்மா மற்றும் அவரது கணவர் இணைந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தனர். இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. மருத்துவர் அர்ச்சனா ஷர்மா அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். ஆனால், பிரசவத்தின் போது அந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் அலட்சியமான மற்றும் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் அர்ச்சனாவை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மருத்துவர் அர்ச்சனா மீது போலீசார் லால்சோட் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302இன் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்ததால் மன அழுத்தத்திற்கு உள்ளான அர்ச்சனா மருத்துவமனைக்கு மேல்மாடியில் உள்ள தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக் குறிப்பில் அர்ச்சனா “என் கணவர் மற்றும் குழந்தைகளை மிகவும் நேசிக்கிறேன். தயவு செய்து என் மரணத்திற்குப் பிறகு என் கணவர் மற்றும் குழந்தைகளை தொந்தரவு செய்யாதீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை, யாரையும் கொல்லவில்லை. PPH ஒரு பிரசவத்திற்கு பின் கடுமையான ரத்தப்போக்கு ஏற்படும் சிக்கலாகும். அதற்காக மருத்துவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள். என் மரணம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கலாம். தயவு செய்து அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்” என்று எழுதியுள்ளார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கடும் கண்டனம் தெரிவித்தார். “டாக்டர் அர்ச்சனா ஷர்மா தௌசாவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. டாக்டர்களுக்கு கடவுள் அந்தஸ்து கொடுக்கிறோம். ஒவ்வொரு டாக்டரும் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறார்கள். ஆனால் உடனே மருத்துவர் மீது குற்றம் சாட்டுவது நியாயமில்லை. ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்கின்றன. டாக்டர்கள் இப்படி மிரட்டப்பட்டால், அவர்கள் எப்படி நம்பிக்கையுடன் தங்கள் வேலையைச் செய்வார்கள்? கோவிட் தொற்றுநோய்களின் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து அனைவருக்கும் சேவை செய்த மருத்துவர்களுக்கு இதுபோன்ற செயலை எவ்வாறு செய்ய முடியும் என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்” என்று கூறினார் அசோக் கெலாட்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த தௌசா காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் மாற்றப்பட்டு ஜெய்ப்பூர் பிரிவு ஆணையர் தினேஷ் குமார் யாதவ் இனி விசாரணை மேற்கொள்வார் என முதல்வர் கெலாட் உத்தரவிட்டுள்ளார். அர்ச்சனா மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவலர் அங்கேஷ் குமாரை பணியிடைநீக்கம் செய்தும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும் எனவும் முதல்வர் கெலாட் உறுதியளித்துளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM