கோடை வெயில் கொளுத்துவதால் புற்றுகளை விட்டு பாம்புகள் வெளியே வர வாய்ப்பு அதிகரிப்பு

திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் கோடை வெப்பம் வாட்ட தொடங்கி விட்டது. கோடை வெப்பத்தில் வெளியே வரும் பாம்பு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது காடுகளில் வாழும் விலங்குகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வருவது வழக்கம். இதுபோல பூமியில் புற்று தோண்டி வசிக்கும் பாம்புகளும், புற்றை விட்டு வெளியே வருவது உண்டு.

கிராமப்புறங்கள், வயல்வெளிகள் உள்பட நகர்புறங்களில் கூட புற்றை விட்டு வெளியே வரும் பாம்புகள் சுற்ற தொடங்கும்.

பாம்பை கண்டால் படையே நடங்கும் என்பது போல பொதுமக்களும் அதனை கண்டு பயந்து ஓடுவது இயல்பு. இந்த சம்பவங்கள் கோடை காலத்தில் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது.

எனவே கோடை காலத்தில் பாம்புகளின் தொல்லையில் இருந்து தப்பிக்க கேரளாவை சேர்ந்த பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷ் பொதுமக்களுக்கு சில வழிமுறைகளை தெரிவித்து உள்ளார். அதன்விபரம்:-

1. கோடை காலத்தில் ஒருபோதும் புதர் நிறைந்த பகுதிகளில் தீ வைக்க வேண்டாம். இதனால் பாம்புகள் வெளியே வர வாய்ப்பு உள்ளது.

2. வீட்டின் அருகே விறகு, கட்டைகளை அடுக்கி வைக்க வேண்டாம். இவற்றில் பாம்புகள் புகுந்து திறந்திருக்கும் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் புகுந்து விட வாய்ப்பு உள்ளது.

3. வீட்டு ஜன்னலுக்கு அருகில் சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஏணி அல்லது குச்சிகளை வைக்க வேண்டாம்.

4. தேங்காய் மட்டைகள், செங்கற்கள், ஓடுகள், கற்களை வீட்டின் வளாகத்தில் குவித்து வைக்க வேண்டாம்.

5. காலணிகளை திறந்தவெளியில் விட்டு செல்ல வேண்டாம். அதற்குள் பாம்புகள் புகுந்து மறைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

6. கதவை திறந்து வைத்திருக்க கூடாது. அதன் வழியாக பாம்புகள் மட்டுமின்றி ஊர்வன, பறப்பன போன்றவையும் வீட்டுக்குள் வந்துவிடலாம்.

7. வீட்டுக்கு அருகில் படர்தாமரை போன்ற செடி, கொடிகளை வளர்ப்பதை தவிர்க்கவும்.

8. வீட்டை சுற்றி குழிகளோ, பள்ளங்களோ இருந்தால் அவற்றை உடனடியாக மூடி விட வேண்டும்.

9. வளாகத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் வீட்டை சுற்றி வாரம் ஒருமுறை டீசல் தெளித்தால் அதன் வாடையில் பாம்புகள் வராது.

10. வீடுகளின் அருகே கழிவு நீர் தேங்கவிடக்கூடாது. அவ்வாறு தண்ணீர் தேங்கி இருந்தால் தாகம் தீர்க்க பாம்புகள் அங்கே வர வாய்ப்பு உள்ளது.

11. கழிவுகளை வயல்வெளியில் கொட்டக்கூடாது. அவ்வாறு கொட்டினால் அங்கு எலிகள் வரலாம். எலியை பிடிக்க பாம்புகள் வரும்.

இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் கோடை காலத்தில் பாம்புகள் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.