2021ம் ஆண்டு அதிமுக, வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் உள்ள வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை வழங்கி சட்டம் இயற்றியது. இந்த சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் பாமக மற்றும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்று அறிவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது. வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும் அரசியல் அமைப்பின் 14, 16வது பிரிவுக்கு எதிராக அமைந்துள்ளது உள் ஒதுக்கீடு என்றும் அறிவித்து கூறி தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
தமிழகத்தில் 20% இட ஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. வன்னியர் அல்லாத இதர சமூகத்தினர் மற்றும் சீரமரபினரும் இந்த பட்டியலில் இடம் பெறுகின்றனர்.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி அன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20% இட ஒதுக்கீடு 3 ஆக பிரிக்கப்பட்டு சீர் மரபினருக்கு 7%-மும், 10.5% வன்னியர்களுக்கும், மீதம் உள்ள 2.5% இதர பிரிவினருக்கும் வழங்கி சட்டம் இயறப்பட்டது. இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை. எனவே இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து அறிவித்தது உயர் நீதிமன்றம்.
மேல் முறையீடு செய்யும் எண்ணம் இல்லை – பாமக
”வன்னியர்கள் குறித்து புள்ளி விவரங்கள் இல்லை என்று கூறுவது சரியானது இல்லை. வன்னியர்களின் சமூக பின்னணி நிலையை உடனே ஆய்வு செய்து மீண்டும் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு மீண்டும் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும்” என்று எம்.பி. அன்புமணி ராமதாஸ் சன் நியூஸ்க்கு அளித்த நேர் காணலில் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்படியே ஏற்கவில்லை என்று பி. வில்சன் கூறியுள்ளார்.
இது குறித்து பாமக செய்தித் தொடர்பாளர் பாலுவிடம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசியது. அப்போது அவர், “எங்களின் மேல்முறையீட்டு மனுக்களை முழுமையாக உச்ச நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. மாறாக எங்களின் பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். சென்னை உயர் நீதிமன்றம், மாநில அரசுகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்க உரிமை இல்லை என்று கூறியது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை என்று கூறியது. ஆனால் உச்ச நீதிமன்றம், ஒரு சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் உள்ளன. இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. ஆனாலும் ஒரு சாதி அடிப்படையில் மட்டுமே ஒரு சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க இயலாது. வன்னியர் சமூகத்தின் சமூக-பொருளாதார நிலை குறித்து சமர்பிக்கப்பட்ட்ட தரவுகள் போதுமானதாக இல்லை என்று கூறி அதன் அடிப்படையில் தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் சென்று அறிவித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய உள்ளீர்களா என்று கேள்வி எழுப்பிய போது, இல்லை என்று பதில் அளித்த அவர், தமிழக அரசு மூன்று மாத காலத்திற்குள் ஆணையம் ஒன்றை அமைத்து வன்னியர் சமூகத்தின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை ஆய்வு செய்து, போதுமான தரவுகளை திரட்டி சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil