பீஜிங்: சீன விமான விபத்து குறித்து 30 நாட்களில் அறிக்கை செய்யப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வூஸுநகருக்கு கடந்த 21-ம் தேதி மதியம் புறப்பட்ட நிலையில், குவாங்சூ மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிக்கு மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உட்பட மொத்தம் 132 பேர் இருந்ததாக சீன விமான போக்குவரத்துத் துறை தெரிவித்தது.
விபத்து நடந்து 3 நாட்களுக்குப் பிறகு விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. போயிங் விமான விபத்திற்கு மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு , தீவிரவாத தாக்குதல், பைலட்டின் உடல் நலமின்மை, தற்கொலை இவற்றில் எதுவேண்டுமானாலும் இருக்கலாம் என ஊகிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விமான விபத்து குறித்து 30 நாட்களில் அறிக்கை செய்யப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து உயரதிகாரி ஒருவர், “விமான விபத்துப் பகுதியில் முக்கியமான தேடுதல் பணிகள் முடிந்துவிட்டன. முதற்கட்ட அறிக்கையை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். முழுமையான அறிக்கை என்பது விபத்து நடந்த ஓராண்டுக்குள் சமர்ப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விமான விபத்தில் ஒருவர் கூட உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் சீன அரசு கருதுகிறது. விபத்துப் பகுதியில் மீட்பு, ஆராய்ச்சிப் பணிகளை முடித்துள்ள குழுவானது விழுந்து சிதறிய விமானத்திலிருந்து 49,117 துண்டுகளை சேகரித்துள்ளது.