சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலான வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலிலும் லக்னோ அணி முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் 7வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடிப்பாட தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்கள் குவித்தது.
சென்னை அணியில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 50 ஓட்டங்களும், சிவம் துபே 49 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 211 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ அணியும், முதல் ஓவரில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசுர வேகத்தில் எண்ணிக்கையை குவித்தது.
லக்னோ அணியின் துவக்க வீரர்களான கே.எல் ராகுல் 40 ஓட்டங்களும், டி காக் 61 ஓட்டங்களும் எடுத்து கொடுத்தனர்.
இதன்பின் வந்த தீபக் ஹூடா மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்தாலும், ஈவன் லீவிஸ் மற்றும் அயூஸ் பதோனியின் மிரட்டலான ஆட்டத்தால் இமாலய இலக்கை 19.3 ஓவரிலேயே அசால்டாக எட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லீவிஸ் 23 பந்துகளில் 55 ஓட்டங்களும், பதோனி 19 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
சென்னை அணியில் அதிகபட்சமாக ப்ரெடோரியஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிராவோ மற்றும் தேஸ்பாண்டே தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இந்தநிலையில், இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலிலும் முன்னேறியுள்ளது.
இந்த போட்டிக்கு முன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த லக்னோ அணி, தற்போது பெங்களூரை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி 8-வது இடத்திலேயே நீடிக்கிறது.