தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்வர் ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டனர்.
அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவராக இருந்த மருத்துவர் சுப்பையா நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.
மருத்துவர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
பணியிடை நீக்கம் உத்தரவை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுப்பையா ஏபிவிபி எனும் மாணவர் சங்கத்தின் தலைவராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்துள்ளதாகவும், இந்த இயக்கம் அரசியல் அமைப்பு அல்ல. சுப்பையா எந்த விதமான அரசியல் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்று வாதிடப்பட்டது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் அரசியல் கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் சுப்பையா பதிவிட்டதாகவும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. அதனை தொடர அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, சுப்பையா பணியிடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், ஒழுங்கு நடவடிக்கை குறித்த துறைநீதியான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
முன்னதாக, மார்ச் 19 அன்று, கடந்த 2020ஆம் ஆண்டு, தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மூதாட்டி வீட்டு வாசலில் நின்று சிறுநீர் கழித்த குற்றச்சாட்டுக்கு கைது செய்யப்பட்டார். அவருக்கு மார்ச் 21 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், சட்ட உதவியைப் பெறுவதைத் தடுக்கும் ஒரே நோக்கத்துடன் பொது விடுமுறை நாளில் தேவையில்லாமல் கைது செய்வது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என குறிப்பிட்டிருந்தார்.