தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருக்கு மேள, தாளங்கள் முழங்க, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா உள்ளிட்டோர் முதலமைச்சரை வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு புதிய இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
முன்னதாக டெல்லி பயணத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், அமீரகப்பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அடுத்த பயணம் இந்திய ஒன்றியத்தின் தலைநகரம் புதுடெல்லியை நோக்கி என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இன்று சந்திக்க உள்ளதாகவும், அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு, ஒன்றிய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை-வெள்ள நிவாரண தொகை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கான சந்திப்பாக இதனை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் வரும் 2ஆம் தேதி டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். திறப்பு விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் விழாவில் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒன்றிய அரசியலில் திராவிட மாடல் தவிர்க்க முடியாத இடத்தை வகிப்பதாகவும், அதன் அழுத்தமான அடையாளம் தான் டெல்லியில் திறக்கப்படும் அண்ணா – கலைஞர் அறிவாலயம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தெற்கின் வரலாற்றை டெல்லியில் எழுதும் பெருமைமிகு நிகழ்வு என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM