புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டு முன்பு பாஜக இளைஞர் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கேஜ்ரிவால் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 70 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 1990-களில் காஷ்மீரை விட்டு இந்துக்களான பண்டிட் சமூகத்தினர் வெளியேற்றப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல டெல்லியிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என அந்த மாநில சட்டப்பேரவையில் கடந்த வாரம் பாஜக உறுப்பினர் ஒருவர் கோரினார். முதல்வர் கேஜ்ரிவால் பதில் அளிக்கும்போது, பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், பாஜக இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா ஆகியோர் தலைமையில் கேஜ்ரிவால் வீட்டின் அருகே நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சிலர் தடுப்புகளை மீறிச் சென்று கேஜ்ரிவால் வீட்டு முன்பு கோஷங்கள் எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். இரும்புக் கதவு மீது பெயின்ட் வீசிய அவர்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தினர்.
இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பதிவுகளில், ‘‘கேஜ்ரிவால் வீடு மீது சமூக விரோத சக்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இது திட்டமிட்ட சதியாகும். கேஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாததால் அவரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
வடக்கு டெல்லி காவல் துணை ஆணையர் சாகர் சிங் கல்சி கூறும்போது, ‘‘டெல்லி முதல்வர் வீட்டு முன் நடந்த ரகளையைத் தொடர்ந்து போராட்டக்கார்கள் உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். சுமார் 70 பேர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.