கொடைக்கானல்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைவிலை குறைந்துள்ள போதும், இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில், கொடைக்கானலில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழகத்திலேயே முதன்முறையாக சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை கடந்து சாதனை படைத்தது. தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.32 க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில், டீசல் விலையும் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது சதமடித்துள்ளது. இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.01 க்கு விற்பனையானது.
டீசல் விலை உயர்வால் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு மதுரை, திண்டுக்கல், பழநி, வத்தலகுண்டு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மக்களின் அன்றாட தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவையும் மலைக்கு வாகனங்களில் கொண்டுவர வேண்டியிருதிருப்பதால் அனைத்து பொருட்களில் விலையும் உயரவாய்ப்புள்ளது என்பதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக கொடைக்கானல் மலை பகுதிகளில் டீசல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.