திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வழங்குவது ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப அதிகாலையில் சுப்ரபாத சேவை நடைபெறும் போது அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த அங்கபிரதட்சணம் செய்வதற்காக ஒரு நாள் முன்னதாக திருமலையில் டோக்கன்கள் இலவசமாக வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அங்கப்பிரதட்சணம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு நாளை முதல் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்து. ஆனால் நிர்வாக ரீதியான காரணங்களால் அங்கப்பிரதட்சணம் டோக்கன் வழங்குவது ஏப்ரல் 2 தேதிக்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அன்று முதல் திருமலையில் உள்ள பிஏசி-1ல் உள்ள இரண்டு கவுன்டர்களில் தினமும் 750 டோக்கன்கள் வழங்கப்பட்டு மறுநாள் அதிகாலை அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்படும். வெள்ளிக் கிழமைகளில் ஏழுமலையானுக்கு அபிஷேகம் நடைபெறுவதால், வியாழக்கிழமை டோக்கன்கள் வழங்குவது முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. எனவே பக்தர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.