புதுடெல்லி: “நாட்டின் மிகப் பெரிய கட்சி (பாஜக) இதுமாதிரியான போக்கிரித்தனத்தில் ஈடுபடக்கூடாது. இது நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாகிப் போகும்” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து, டெல்லி சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சாவினர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் வீட்டின் முன் கதவு, ஒரு சிசிடிவி கேமரா உள்ளிட்டவை சேதம் அடைந்தன.
இந்தத் தாக்குதல் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரித்துள்ளார். டெல்லியில் இன்று வியாழக்கிழமை நடந்த இ-ஆட்டோ அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “நாட்டின் நலனுக்காக நான் சாகவும் தயாராக இருக்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் முக்கியம் இல்லை, நாடுதான் முக்கியம். நாட்டின் மிகப் பெரிய கட்சி (பாஜக) இந்த மாதிரி போக்கிரித்தனத்தில் ஈடுபடக் கூடாது. இது இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணச் செய்தியாக மாறிவிடும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லவேண்டும். 75 ஆண்டுகளை நாம் சண்டையிட்டே வீணடித்துள்ளோம். இந்த போக்கிரித்தனத்தால் ஒரு போதும் முன்னேற்றம் ஏற்படாது. 21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
நேற்று நடந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, “அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தலில் வீழ்த்தமுடியாத பாஜக, அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது” என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், முதல்வர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரி, ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-வான பரத்வாஜ் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், “பாஜகவின் குண்டர்கள் பலர் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேடத்தில் வந்து டெல்லி முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள், டெல்லி போலீசாரால் வழங்கப்பட்ட பாதுகாப்பு வளையத்தை சர்வசாதாரணமாக கடந்து முதல்வரின் வீட்டின் முன்னால் இருந்த பூம் தடையை உதைத்து உடைத்துள்ளனர். லத்தியால் அங்குள்ள சிசிடிவி கேமராவை உடைத்துள்ளனர். இவை அனைத்தும் அங்கு பதிவான வீடியோ காட்சிகளின் மூலம் தெரிய வருகிறது.
இந்தத் தாக்குதல் டெல்லி போலீசாரின் மறைமுகமான உதவியுடன் நடந்துள்ளதாக தெரிகிறது. எனவே, இந்தத் தாக்குதல் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக சுதந்திரமான நியாயமான குற்ற விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் இருக்கும் வகையில் டெல்லி முதல்வரின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.