கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் தமிழக – கேரள வன எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. 2,000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பௌர்ணமியன்று சித்திரை முழு நிலவு விழா கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்ணகி கோயில் திருவிழாவிற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 16-ம் தேதி சித்திரை மாதப் பௌர்ணமியன்று இந்த விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வளாகத்திற்குள் அமைந்துள்ள ராஜீவ்காந்தி கலையரங்கில் தேனி மாவட்டக் கலெக்டர் முரளீதரன் மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தலைமையில் சித்திரை முழு நிலவு விழா நடத்துவது தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இரு மாநில வனத்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக – கேரள கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இதில் தமிழக கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள், திருவிழாவிற்குச் செல்லும் பக்தர்களுக்கு உணவு, போக்குவரத்து, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் தங்கு தடையின்றி கிடைப்பதற்குக் கோரிக்கைகள் வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, கண்ணகி கோயிலில் வருடத்தில் 24 நாள்கள் திருவிழா நடத்தப்படும் என்ற கேரள மாநில முதலமைச்சரின் அறிவிப்பு குறித்துக் கூட்டத்தில் கேட்டதற்கு, “அதைப் பற்றித் தற்போது பேச வேண்டாம்” என இடுக்கி ஆட்சியர் தெரிவித்துவிட்டார். எனவே முதலமைச்சரின் அறிவிப்பை நடைமுறைப்படுத்தக்கோரி நீதிமன்றத்தை நாட உள்ளதாகக் கூறினர்.
மேலும், சித்ரா பௌர்ணமித் திருவிழாவிற்குக் கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் பகல் 3 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கி ஒரு மணி நேர வழிபாட்டைக் குறைத்துள்ளனர். ஆண்டிற்கு ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படும் சித்ரா பௌர்ணமித் திருவிழாவைப் பாதியாகக் குறைத்திருப்பது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் பக்தர்களுக்குத் தேவையான போக்குவரத்து, உணவு, குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இது தவிர கடந்த காலங்களில் கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களிடம் கேரள வனத்துறையினர் காட்டிய கெடுபிடிகளை இந்த ஆண்டு தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.