தேனி மாவட்ட ஆட்சியருடன் பாஜக விவசாய அணி நிர்வாகிகள் சந்தித்து, தேனி மாவட்டத்திற்கான வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
தேனி மாவட்ட ஆட்சியர் திரு.முரளிதரன் IAS அவர்களைச் சந்தித்து, கிடப்பிலுள்ள பல்வேறு திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டுமென பாஜக விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
முல்லைப்பெரியாறு அணை வாய்க்காலிலிருந்து ரூ.256 கோடி திட்டமதிப்பில், குள்ளப்பகவுண்டன்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை பொதுப்பணித்துறையால் மதிப்பீடு செய்யப்பட்ட திட்டத்தை நிறைவேற்றி, 21 குளம்,குட்டைகளை நீர்நிரப்ப மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆண்டிபட்டி நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவது தொடர்பாக, அதன் வரைபடத்துடன் தேனி மாவட்ட விவசாயசங்க பிரதிநிதிகள் முன்னிலையில் அத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், 152 கிராமங்களும்,5 இலட்சம் ஏக்கர் விவசாய பூமியும்,1.5 இலட்சம் விவசாயிகளும்,12 இலட்சம் பொதுமக்களும்,1 இலட்சம் கால்நடைகளும் நீராதாரம் கிடைக்கப்பெறும் என்பதை மாவட்ட ஆட்சியருக்கு பாஜக விவசாய அணி மாநில தலைவர் விவரித்தார்.
வைகை அணையை தூர்வாருவதால் அதன் கொள்ளளவு 1.5 TMC தண்ணீர் அதிகரிக்கும். அதனால் மதுரை குடிநீருக்கு நிரந்தரத்தீர்வு கிடைப்பதோடு, வைகை பாசன விவசாயிகளும் பயன்பெறுவர்.
எனவே உடனடியாக வைகை அணையை தூர்வாரவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். முல்லைப்பெரியாறு அணையின் நீர்கட்டுப்பாடுகள் தேனி மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தில் வருவதால் முல்லைபெரியாறு அணையை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பேபி அணையை வலுப்படுத்த தமிழக முதல்வருடன் பேசி ஐந்து மாவட்ட விவசாயிகள் நலனுக்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனை பொறுமையாக கேட்டறிந்த தேனி மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், பாஜக விவசாய அணி மாநில தலைவர் .G.K.நாகராஜ்,ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தலைவர் .S.R.தேவர், சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கம்,மாவட்ட பொதுச்செயலாளர் G.P.ராஜா,முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன்,. நாராயண பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.