மு.க ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றப் பிறகு, மூன்றாவது முறையாக டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துள்ளார். இன்று மதியம் 1 மணியளவில் பிரதமரின் அலுவலகத்தில் நடந்த சந்திப்பு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித் ஷா, மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சந்திக்க நேரம் அளித்து, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என நம்பிக்கையளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்கிருந்து புலம் பெயர்ந்து வரும் இலங்கை வாழ் தமிழர்களுக்குத் தமிழ்நாடு அரசு உதவுவதற்கு அனுமதிக்க வேண்டும். கச்சத்தீவு பிரச்னை காரணமாகப் பாதிக்கப்படும் மீனவர்கள் தொடர்பான விஷயத்தில் விரைவில் தீர்வு காண வேண்டும்.
உக்ரைனில் மருத்துவம் பயின்ற மாணவர்களின் மருத்துவப் படிப்பு தொடர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். கர்நாடகாவில் மேக்கே தாட்டூவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. நரிக்குறவர்களையும், குருவிக்காரர்களையும் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமரிடம் நீட் விவகாரம் தொடர்பாக விரைவில் முடிவெடுக்க வேண்டும் என அழுத்தமாக வலியுறுத்தியுள்ளேன். மேலும், சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்குரிய இடத்தை அளிக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் கேட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.