நாகப்பட்டினம் மாவட்டம், பாப்பாகோவில் பகுதியில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில், பிசியோதெரபிஸ்ட் படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம், அமிர்தா நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியான சுப்ரமணி, சித்ரா தம்பதியினரின் மூன்றாவது மகள் சுபாஷினி, சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில், முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் படித்து வந்தார்.
இந்த நிலையில், மாணவிக்கு முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளதால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மீதமுள்ள கல்வி கட்டணத்தை கட்ட வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
மேலும், பணம் கட்டாத மாணவிகளை கட்டாய விடுப்பு அளித்து கல்லூரி, மாணவிகளை வகுப்புக்கு வெளியே நிறுத்தி வைத்தும் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி சுபாஷினி நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து, மாணவியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கல்லூரி தாளாளர் ஆனந்த், முதல்வர் லட்சுமிகாந்தன், பொறுப்பாசிரியர் ஜான்சி மீது போலீசார் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று கல்லூரிக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவியின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவிகள் கோஷமிட்டு வருகின்றனர்.
மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாத அளவுக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.