புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து பிரதமர்களும் பங்களித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவுக்கு தீன் மூர்த்தி எஸ்டேட்டில் நினைவு இல்லம் உள்ளது. நேரு பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள் அந்த நினைவு இல்லத்தில் உள்ளன.
நேருவின் தியாகத்தை அந்த நினைவு இல்லம் பிரதிபலிப்பது போல முன்னாள் பிரதமர்கள் அனைவரது தியாகத்தையும் பிரதிபலிக்க செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி திட்ட மிட்டார். இதையடுத்து தீன் மூர்த்தி வளாகத்தின் ஒருபகுதியில் முன்னாள் பிரதமர்கள் அனைவருக்கும் அருங்காட்சியகம் ஒன்று கட்டப்படும் என்று அவர் 2018-ல் அறிவித்தார்.
அதன்படி ரூ.271 கோடி செலவில் 10,975.36 சதுர மீட்டர் பரப்பளவில் முன்னாள் பிரதமர்கள்அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் 14 முன்னாள் பிரதமர்களின் அபூர்வப்படங்கள், குறிப்புகள், நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்கள் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பேசிய ஆடியோ, வீடியோக்களும் அங்குஇடம்பெற்றுள்ளன. அதை பொதுமக்கள் ரசிக்க முடியும்.
இந்த அருங்காட்சியகத்தை வரும் ஏப்.14-ல் அம்பேத்கர் பிறந்த நாளில் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அன்றையதினம் அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்த தினம் தொடங்குகிறது. அதன் தொடக்கமும் அந்த விழாவில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது அவர் கூறும்போது, “நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து பிரதமர்களும் பங்காற்றியுள்ளனர். அதை நாம் அங்கீகரிக்கவேண்டும். அவர்களை நாம் கவுரவிக்கவேண்டும். அனைத்து எம்.பி.க்களும் இந்த அருங்காட்சியகத்தையும், அம்பேத்கர் அருங்காட்சியகத்தையும் பார்வையிடவேண்டும்” என்றார்.
– பிடிஐ