நாமக்கல், கொமாரபாளையம் காவல் நிலையத்தில் நேற்றைய தினம் 3 அதிமுக கவுன்சிலர்கள் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் தங்கமணி மீது கொலை மிரட்டல் புகார் அளித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்களிடம் பேசினோம். “நாங்கள் அ.தி.மு.க-வில் நீண்டகாலமாக உறுப்பினர்களாக இருந்து வந்தோம். தற்போது நடைபெற்று முடிந்த ஊராட்சித் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு 16-வது வார்டில் பூங்கோதை, 43- வது வார்டில் ரேகா, 13-வது வார்டு நந்தினி ஆகிய மூவரும் வெற்றி பெற்றிருந்தோம். பின்னர் நகராட்சித் தலைவர் தேர்தலில் கொமாராப்பாளையம் நகராட்சியின் 8-வது வார்டில் தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியசீலன் என்பவருக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி ஓட்டுப் போடுமாறு எங்களைக் கட்டாயப்படுத்தினார். அதற்கு நாங்கள் அ.தி.மு.க உறுப்பினராக இருந்துக் கொண்டு எதற்கு தி.மு.க உறுப்பினருக்கு ஓட்டுப் போட வேண்டுமென்று, ஓட்டுப் போடவில்லை. இதனால் 31-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் விஜய்கண்ணன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்குக் காரணம் நாங்கள்தான் காரணம் என்று எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, எங்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி விட்டார் முன்னாள் அமைச்சர் தங்கமணி. இதற்கிடையில் நேற்று காலை எங்களது வீடுகளுக்கு வந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த பாலசுப்ரமணியம், பழனிசாமி, புருஷோத்தமன், ரவி, பாஸ்கரன் ஆகியோர், `முன்னாள் அமைச்சர் கூறியும் கேட்காமல், ஓட்டு போட்டிங்கள்ல, மரியாதையா உங்களுக்குத் தேர்தலுக்குச் செலவு செஞ்ச பணத்தை எடுத்து வையுங்க’ணு அடாவடியா பேச ஆரமிச்சாங்க. மேலும், `பணத்தை எடுத்து வைக்கலனா குடும்பத்துல உள்ளவங்க யாரும் உயிரோட இருக்க மாட்டாங்க’ என்று மிரட்டினார்கள்.
அதையடுத்து, இது தொடர்பாக கொமாரப்பாளையம்காவல் நிலையத்தில் புகாரளித்தோம். ஆனால், முன்னால் அமைச்சர் என்பதால் போலீஸார் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர்” என்றனர்.
இதுகுறித்து கொமாரப்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவியிடம் பேசினோம். “புகார் வந்திருப்பது உண்மைதான். ஆனால் முன்னாள் அமைச்சர் மீது இந்தப் புகாரும் வரவில்லை. இந்தப் புகாருக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. இது அ.தி.மு.க-வில் நடக்கும் உட்கட்சி கோஷ்டி மோதல்” என்றார்.