கோயம்புத்தூர் மருதமலை ரோட்டில் பாரதியார் பல்கலைக்கழகம் இருக்கிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் இருக்கும் விடுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த பகுதியில் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மர்மநபர்கள் அங்கே சுற்றி திரிவதாக தகவல் வெளியாகி வந்தது.
இதுகுறித்து மாணவிகள் பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து, சம்பவ தினத்தன்று 5 பேர் கொண்ட கும்பல் மாணவிகள் இருக்கும் விடுதிக்குள் புகுந்து அதில் ஒரு நபர் ஆடையே இல்லாமல் முழு நிர்வாணமாக இருந்தார்.
இதைக்கண்ட மாணவிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர். இதனால், அந்த நபர்கள் விடுதியில் இருந்து தப்பியோடினர். அந்த நபர்களை மாணவிகள் புகைப்படம் எடுத்தனர். இதனை தொடர்ந்து, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த விடுதியில் ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லை என்று மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன் மர்மநபர்கள் அடிக்கடி விடுதிக்கு வருவதால் தங்களது பொருட்கள் காணாமல் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் மாணவிகளை சமாதானப்படுத்தி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், விடுதியில் பாதுகாப்புக்காக ஒரு தனி குழுவை நியமிப்பதாக அவர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.