மதுரை:
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதுரை புதுநத்தம் ரோட்டுக்கு சென்று கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அவருடன் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் ஆகியோரும் உடன் சென்றனர்.
மூன்று அமைச்சர்களும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்துக்கு வந்தனர். அங்கு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
அதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘நீட்’ தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓயமாட்டோம்.
பள்ளிக்கூடங்களில் பாலியல் தொல்லை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.