முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நாடகத்திற்குப் பிரதமர் மயங்கமாட்டார் என எடப்பாடி பழனிசாமி முதல்வரின் டெல்லி பயணம் குறித்து விமர்சித்திருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தி.மு.க செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் அரசு அதிகாரிகள் செய்தது சட்டவிரோதம் என்று மத்திய அரசுக்குப் புகார் போயிருக்கிறது. பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு தமிழகம் வந்த போது கோ பேக் மோடி என்று கருப்பு பலூன் பறக்க விட்டவர். அதுமட்டுமல்லாமல் பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் விமர்சித்தவர்.
டெல்லி பயணத்தின் மர்மத்தை மக்களுக்கு விளக்குவாரா முதலமைச்சர்? பதவிக்கு வந்த 10 மாதகாலத்தில் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ள முதலமைச்சர், தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக் கோரி பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை நேற்று டெல்லியில் சென்று சந்தித்திருப்பதாகச் செய்திகள் பரவி வருகின்றன. முதலமைச்சரின் வாய்ஜாலத்திலும், நாடகத்திலும் மயங்க பிரதமர் மோடி இந்திரா காந்தி அல்ல… மோடி. சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு உண்மை எனில் உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும். ஊழலுக்கு எதிரான நெருங்க முடியாத நெருப்பைப் போன்றவர் பிரதமர் மோடி என்பதை தி.மு.க-வினர் உணரும் நாள் வரும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.