தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடந்ததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்தபடியே இருந்தன. குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தைச் செயல்படுத்த காவல்துறை தலைவரான சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களை ஒழிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. நெல்லை மாநகரத்தில் கடந்த 28-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாள்களாக நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்
கஞ்சா விற்பனை தொடர்பாக நெல்லை மாநகரில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிடிபட்ட நபர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கார், மூன்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் மட்டும் ஏழு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை காரணமாகப் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பல் கலக்கம் அடைந்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் நடக்கும் இந்த போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை காரணமாக இளைமையிலேயே போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
காவல்துறை நடவடிக்கை குறித்துப் பேசிய சமூக ஆர்வலர்கள், “நெல்லை மாநகர எல்லைக்குள் மட்டும் மூன்றே நாள்களில் 19 கஞ்சா வியாபாரிகளைக் கைது செய்திருக்கிறார்கள். அப்படியானால், இதுவரையிலும் கஞ்சா விற்பனையைக் கண்டுகொள்ளாமல் அனுமதித்தது ஏன்?
இப்போதும் கூட 20 கிலோவுக்கும் அதிகமான அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தினந்தோறும் கஞ்சா பிடிபட்டதாகக் கணக்குக் காட்டுவதற்காக நுண்ணறிவு பிரிவு போலீஸார் அவற்றைப் பதுக்கி வைத்து தினமும் கணக்குக் காட்ட இருப்பதாகத் தகவல் பரவுகிறது” என்கிறார்கள்.

இது பற்றி நெல்லை மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் நாகசங்கரிடம் கேட்டதற்கு, “கடந்த மூன்று நாள்களாக 19 பேர் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் கொஞ்சம் போலீஸாரால் பதுக்கி வைக்கபப்ட்டதாகச் சொல்வதில் நூறு சதவிகிதம் உண்மை கிடையாது” என்றார்.