டெல்லி மேல்சபையில் மார்ச் மாதம் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 7 நியமன உறுப்பினர்கள் உள்பட 72 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.
ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, ஜெயராம் ரமேஷ், சுரேஷ் பிரபு, பிரபுல் படேல், சுப்பிரமணியசாமி, பிரசன்னா ஆச்சார்யா, சஞ்சய் ராவத், நரேஷ் குஜ்ரால், சதீஷ் சந்திர மிஸ்ரா, மேரிகோம், சுவப்னா தாஸ் குப்தா, நரேந்திர யாதவ் உள்பட 72 மேல்சபை எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைந்துள்ளது.
இதையொட்டி பாராளுமன்ற மேல்சபையில் அவர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, ஓய்வு பெற இருக்கும் 72 எம்.பி.க்களையும் மேல் சபையில் பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஓய்வு பெறும் உறுப்பினர்கள் தங்கள் அனுபவத்தை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களின் இடத்தை தற்போதைய எம்.பி.க்கள் பூர்த்தி செய்ய வேண்டும். மூத்த உறுப்பினர்களிடம் இருந்து கற்றுக்கொண்டவற்றை நாமும் பின்பற்றுவோம்.
பதவிகாலம் முடியும் எம்.பி.க்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும். சில நேரங்களில் கல்வி அறிவை விட அனுபவ அறிவு வலிமைமிக்கதாக இருக்கும். பதவி காலத்தை நிறைவு செய்யும் எம்.பி.க்கள் மீண்டும் எம்.பி.யாக அவைக்கு வரவேண்டும்.
இவ்வாறு மோடி பேசினார்.