இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள சூழலில், அந்நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில், சிந்த் மாகாணத்தில் உள்ள கொத்ரி பகுதியின் அருகே ரெயில் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வைத்து அதனை வெடிக்க செய்துள்ளனர். இந்த சம்பவத்தில், அதன் ஒரு பகுதி சேதமடைந்து உள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்து அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. அது முடிந்தவுடன், ரெயில் சேவை மீண்டும் இயங்கும் என கூறியுள்ளனர்.
துணை ராணுவ படையினர், போலீசார் மற்றும் பிற சட்ட அமலாக்க அமைப்புகளும் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளன. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவும் அந்த பகுதிக்கு சென்று குண்டுவெடிப்புக்கான இயற்கையான காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, மாகாணத்தின் பல பகுதிகளில் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில்வே தண்டவாள தகர்ப்பு சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் அல்லது தனிநபரும் பொறுப்பேற்கவில்லை.