புதுடெல்லி: பிம்ஸ்டெக் நாடுகள் இடையே ஒற்றுமையும், நல்லிணக்கமும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
வங்கக்கடல் பகுதியில் உள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், தாய்லாந்து மியான்மர் ஆகிய நாடுகள் இணைந்து பிம்ஸ்டெக் என்ற பெயரில் கூட்டமைப்பை கடந்த 1997-ம் ஆண்டு ஏற்படுத்தின.
இந்நிலையில் வங்காள விரிகுடா கடல்பகுதி நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் மாநாட்டை இலங்கை நடத்துகிறது. இந்த மாநாடு இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் காணொலி முறையில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் உள்ள பிம்ஸ்டெக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தை நீட்டிக்கவும் விரிவாக்கவும் செயலாற்றி வருகிறோம். மேலும், குற்றவியல் விவகாரங்களில் சட்ட உதவி வழங்குவது தொடர்பான உடன்பாடுகள் கையொப்பமாகி உள்ளன.
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் கூட்டாக தீவிரவாதம், வன்முறை தீவிரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும். தீவிரவாதம், தீவிரவாத வன்முறை, சைபர் தாக்குதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை கூட்டாக எதிர்க்க வேண்டும்.
வணிக ஒத்துழைப்பு, துறைமுக வசதிகள், படகு சேவைகள், கடலோர கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு முக்கியமானது. பொருளாதார மற்றும் சுகாதார ரீதியான சவால்கள் அதிகரித்து வரும் நிலையில் பிம்ஸ்டெக் நாடுகள் இடையே ஒற்றுமையும், நல்லிணக்கமும் இந்த காலகட்டத்தின் அவசியமாக விளங்குகிறது.
கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் எங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறோம். தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிடமிருந்து மண்டல அளவிலான ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதே நேரத்தில் சர்வதேச நாடுகள் ஒழுங்கின்ஸ்திரத்தன்மை கேள்விக்குறியை எழுப்புகிறது. ரஷ்யா-உக்ரைன் நாடுகள் இடையே நடைபெற்று வரும் போரானது இந்த மண்டலத்தில் ஸ்திரத்தன்மை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. ஐரோப்பாவில் அண்மை காலமாக நடந்து வரும் நிகழ்வுகள் சர்வதேச கட்டமைப்பையே மாற்றியுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான பிரச்சினையை சுட்டிக்காட்டும் வகையில் பிரதமர் இவ்வாறு கூறினார். மேலும், பிம்ஸ்டெக்கின் நிர்வாக தேவைகளுக்காக இந்தியா 7.5 கோடி ரூபாயை வழங்கும் என்றும் பிரதமர் மோடி அப்போது அறிவித்தார்.