இஸ்லாமாபாத்: இம்ரான் கான் அரசிற்கு எதிரான சதிக்கு பின்னணியில் இந்தியாவும் இஸ்ரேலும் உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் பாவத் சவுத்ரி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்ப பெற்றால், பார்லிமென்டை கலைக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவை திரும்ப பெற்றதால், இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனிடையே, இம்ரான் கான் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இது தொடர்பாக அங்கிருந்து வரும் தகவல்: இரு தரப்புக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் ஒரு விஷயம் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. அது, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்ப பெற்று கொள்ள வேண்டும். அதற்கு பதில், பார்லிமென்ட்டை கலைத்துவிட்டு விரைவாக தேர்தல் நடத்தப்படும். இதில் முடிவு ஏற்பட்டால், வரும் ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடக்கும். இதனை செயல்படுத்தும் பொறுப்பு, அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு வழங்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே அந்நட்டின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி கூறுகையில், இம்ரான் கான் அரசிற்கு ஏற்பட்ட சதியின் பின்னணியில் இந்தியாவும், இஸ்ரேலும் தான் காரணம் எனக்கூறியுள்ளார்.
Advertisement