சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை தாறுமாறாக உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்ப பெற வலியுறுத்தியும் மறுமலர்ச்சி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி அளவில் சென்னை வள்ளூவர்கோட்டம் அருகே நடைபெறும்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையிலும், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், சைதை ப.சுப்பிரமணி, டி.சி.இராசேந்திரன், கே. கழக குமார், காஞ்சி இ.வளையாபதி, மா.வை.மகேந்திரன், ஊனை ஆர்.இ.பார்த்திபன் மற்றும் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பூவை மு.பாபு ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ சிறப்புரை ஆற்றுவார்.
சென்னை மண்டலத்தின் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன முழக்கமிட வேண்டும்.
ம.தி.மு.க. நடத்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.