சென்னை:
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாலை போட்டு கட்சியினர் தங்கள் வீடுகள் முன்பே போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவிக்க
காங்கிரஸ்
அழைப்பு விடுத்து இருந்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் வீடுகள், கட்சி அலுவலகங்கள் முன்பு காங்கிரசார் நூதன போராட்டம் நடத்தினார்கள்.
சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் களைகட்டியது. வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் தண்டையார்பேட்டையில் சர்க்கிள் தலைவர் சையது முன்னிலையில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெண்கள் ரோட்டோரத்தில் மண் அடுப்பில் விறகை எரித்து சமையல் செய்தனர்.
அருகில் சமையல் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர். கோயம்பேடு சின்மயா நகர் அருகில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அருகில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் முத்தழகன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் சமையல் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து அதில் 2014, 2018 மற்றும் தற்போது பெட்ரோல், கியாஸ் விலை எவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்பதை விளக்கும் வகையில் விலைப்பட்டியலும் வைத்து இருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயன், விருகை பட்டாபி, இல.பாஸ்கரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்சென்னையில் ஆதம்பாக்கம் நியூகாலனியில் உள்ள மாவட்ட
காங்கிரஸ்
அலுவலகம் முன்பு சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாலை அணிவித்து வைத்திருந்தனர்.
மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத் தலைமையில் விலை உயர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதேபோல் அம்பத்தூர், மதுரவாயல் தொகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் இந்த நூதன போராட்டம் நடந்தது.
அடையாறில் உள்ள முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு வீட்டின் முன்பு சிலிண்டருக்கு மாலை அணிவித்து வைத்திருந்தனர். அடையாறு சாஸ்திரி நகரில் முன்னாள் மத்திய மந்திரி வாழப்பாடி ராமமூர்த்தி அலுவலகம் எதிரே வாழப்பாடி ராமசுகந்தன் தலைமையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து வைத்து இருந்தனர்.
இதில் மாநில துணை தலைவர் தாமோதரன், மயிலை தரணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மற்றும் நொச்சிக்குப்பம், நம்பிக்கை நகர் ஆகிய இடங்களிலும் நூதன போராட்டம் நடந்தது.