பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் 3 கட்ட போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதும் தெருக்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் காங்கிரசார் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அடுத்த கட்டமாக மாவட்டங்களிலும், 3-வது கட்டமாக மாநில தலைநகரங்களிலும் போராட்டங்களை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர். சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவிக்கப்பட்டு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
டெல்லியில் பாராளுமன்றம் அருகே விஜய்சவுக் பகுதியில் நடந்த காங்கிரஸ் போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அவர் மற்ற தலைவர்களுடன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று காங்கிரசார் குரல் எழுப்பினார்கள்.
ராகுல்காந்தி பங்கேற்ற போராட்டத்தில் பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் பங்கேற்றனர்.
மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.