மணிப்பூர், அசாம், நாகாலாந்து மாநிலங்களில் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு சூழல் மேம்பட்டதாலும், வடகிழக்கு பகுதியில் அமைதி நிலவ மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் விளைவாக விரைவாக வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அவர், அவரது தொடர் அர்ப்பணிப்பால், பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியில் தற்போது அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமித்ஷா கூறினார்.
இந்நிலையில், சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையை குறைக்கும் அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.