திருவனந்தபுரம்:
கேரளாவில் டெக்னோபார்க், கொச்சி இன்போ பார்க் மற்றும் கோழிக்கோடு ஐடி பார்க் என மூன்று ஐ.டி. பூங்காக்கள் உள்ள நிலையில், இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஐ.டி. தொழில் வல்லுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு, மதுபானக் கொள்கையை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ஐ.டி.தொழில்நுட்ப பூங்காக்களில் பீர் பப்களை அனுமதிப்பது மற்றும் சிறந்த வசதிகளுடன் கூடிய சில்லறை மது விற்பனை நிலையங்களைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும் சுற்றுலா மேம்பாட்டு மையங்களில் மதுபானம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழங்களை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தபட்ச ஆல்கஹால் கொண்ட மதுபானங்கள் தயாரிக்க உரிமம் வழங்கவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது, அரசுக்கு சொந்தமான கேரள மாநில மதுபான கழகத்தில் 400 சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன. மேலும் 100 க்கும் மேற்பட்ட புதிய சில்லறை மது விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.