மத்திய அரசு சாமானியர்களின் பாக்கெட்டில் திருடுகிறது: நானா படோலே தாக்கு

மும்பை :

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த கடும் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில் இந்த விலை உயர்வு குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது எரிபொருள் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்ட நேரத்திலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டின் எரிபொருட்கள் மீதான விலையை கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி சாமானிய மக்களின் பாக்கெட்டில் இருந்து திருடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “ எரியும் சுடரானது அணையப்போகும் நேரத்தில் அதிக வெளிச்சம் தருகிறது. இதுபோல தான் இதுவும். அவர்களின் வெற்றி நீண்டநாட்கள் நீடிக்காது” என்றார்.

2008 மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் சாட்சிகள் பிறழ்வு குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், “ இது நீதித்துறை பிரச்சினை. இதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் இன்று மக்கள் நீதித்துறையின் மீது சந்தேகம் கொண்டுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. பணபறிப்பு வழக்குகளில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் கமிஷனர் பரம்பீர் சிங்கிற்கு ஒரு நீதியும், பணமோசடி வழக்கில் சிறையில் இருக்கும் அனில் தேஷ்முக்கிற்கு மற்றொரு சட்டமும் ஏன்?” என்றார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.