மதுரை: நீதிபதி சச்சார் குழு பரிந்துரை மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளின் அடிப்படையில் சிறுபான்மையினரின் நலன்களை மத்திய மாநில அரசுகள் பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதில், “மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டவிதிகளை மதித்து கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும். ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் (2016) அமலுக்கு வந்த 5 ஆண்டுகளுக்குள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அரசு பொதுக்கட்டிடங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்ற சட்டவிதி அமலாகவில்லை. தொழில்நுட்பத்தை பயன்டுத்தி போக்குவரத்து, தகவல் தொடர்பு சாதனங்களும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட வேண்டும். அனைத்து வறுமை ஒழிப்பு சமூகப் பாதுகாப்பு திட்டங்களிலும் மற்றவர்களை விட கூடுதலாக 25 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் . உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி 35 கிலோ உணவு தானியத்துக்குரிய அந்தியோதயா அன்னயோஜன குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும். தனியார் துறைகளில் 5 சதவிகிதம் வேலைகளை பெற்றுத்தர வேண்டும்.
பல்நோக்கு அடையாள சான்று வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மற்றும் மாநில நிதியம் உருவாக்குதல் உள்ளிட்ட சட்டவிதிகள் இருந்தும் . இச்சட்டவிதிகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்காத காரணத்தால் அமலாகவில்லை. 2014ம் ஆண்டு மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மாற்றுத் திறனாளிகளை தெய்வப் பிறவிகள் என நாமம் சூட்டி அத்துறையின் பெயரையே அதிகாரப்பூர்வமாக மாற்றி மோசடி செய்ததே தவிர, அவர்களது சட்ட உரிமைகள் மற்றும் ஐ.நா. உடன்படிக்கை உரிமைகள் (2007) விதிகளை அமல்படுத்தாமல் ஏமாற்றி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டி சுருக்குகிறது.
உதாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊன்றுகோல் உள்ளிட்ட அங்க அவையங்கள் உற்பத்தி செய்யும் மத்திய அரசின் “அலிம்கோ” நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ரூ.50 கோடி ஒதுக்கிய நிலையில் 2022-23 நிதியாண்டுக்கு மிகமோசமாக ரூ.10 லட்சம் மட்டுமே ஒதுக்கி மாற்றுத்திறனாளிகளை கேவலப்படுத்தும் வேலையை செய்துள்ளது. மாற்றுத் திறனாளிகளின் நலன் மாநில அரசின் பொறுப்பு என்ற முறையில் அண்டை மாநிலங்களுக்கு ஈடாக, மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
முதுகுதண்டுவடம், தசைச்சிதைவு உள்ளிட்ட கடும் பாதிப்புக்குள்ளாகி படுக்கையிலேயே கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5000 ஆக உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கிராமப்புற 100 நாள் வேலைதிட்டத்தில் வறுமை ஒழிப்பு திட்டங்களில் கூடுதல் அளவு வழங்க வேண்டும் என்ற மாற்றுத்திறனாளிகள் சட்டவிதியை பயன்படுத்தி குறைந்தபட்சம் அவர்கள் இடம் பெற்றுள்ள குடும்பங்களுக்கு 125 நாட்களாக உயர்த்தியும், முழுமையாக வேலை வழங்கவும் அரசாணை 52 மற்றும் ஊரக வளர்ச்சி ஆணையரின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக அமல்படுத்தவும், ஊராட்சிமன்ற தலைவர்களின் சட்டவிரோத தலையீடுகளை தடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்ற வேண்டுமே தவிர அவர்களது போராட்டங்களை அடக்கி ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது எனவும் தமிழக அரசை மாநாடு வலியுறுத்திக் கோருகிறது.
இந்திய அளவிலும் , தமிழகத்திலும் சிறுபான்மையினர் நிலை குறித்து நீதிபதி ராஜேந்திர சச்சார் மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசன் அறிக்கைகள் சிறுபான்மை முஸ்லீம்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலைமை குறித்த உண்மைகளை வெளிக்கொணர்ந்ததோடு, அவர்கள் கல்வி வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார நிலைகளில் ஏற்றம் கண்டிட பல பரிந்துரைகளை அரசுக்கு அளித்தன. இந்த பரிந்துரைகள் வெளியான காலத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்பரிந்துரைகளை ஏற்று நிறைவேற்றுமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டது.
ஆனால் பரிந்துரைகள் வழங்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஒன்றிய அரசுகள் அவற்றை ஏற்று அமலாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. எனவே, நீதிபதி சச்சார் குழு பரிந்துரை மற்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகள் அடிப்படையில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குமாறும் , தலித் கிறித்துவர்களை பட்டியல் சாதியினராக அங்கீகரித்து இட ஒதுக்கீடு வழங்குமாறும் ஒன்றிய அரசை இம்மாநாடு கோருகிறது. அதே சமயம் தலித் கிறிஸ்த்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமென்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது .
இந்தியாவில் பிராந்திய அளவில் உச்ச நீதிமன்ற கிளைகள் அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அனைவருக்கும் நீதி பெறுவதற்கான உரிமையை உத்தரவாதப்படுத்தி இருக்கிறது . உச்சநீதிமன்றத்தின் கிளைகள் பிராந்திய அளவில் அமைக்கப்பட வேண்டும் என்று சட்டக் கமிஷன்களும் , பாராளுமன்ற நிலைக்குழுக்களும் வழிகாட்டியிருக்கின்றன. வழக்கறிஞர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பார்கவுன்சில்களும் , அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளும் பிராந்திய அளவில் உச்சநீதிமன்ற கிளைகள் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள். ஜனநாயகத்தில் அதிகாரங்கள் பரவலாக்கப்படும் போதுதான் அது கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு சென்றடையும்.
இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள மக்களுக்கு தங்கள் சட்ட உரிமையை நிலைநாட்ட இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுடெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம் வரை சென்று பெரும் தொகை செலவு செய்து வழக்கு நடத்துவது என்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது . நீதி பெறுவதற்கான உரிமையை அனைத்துப் பகுதி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலமே சட்டத்தின் ஆட்சியை , உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியும் . சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைப்பதன் மூலமே சாதாரண மக்களும் உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கான வாய்ப்பும் வழக்குகளை முடிப்பதற்கான வாய்ப்பும் உருவாகும் . எனவே , உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம் போன்ற பிரச்சனைகளில் விசாரணையை நடத்தாமல் கால வரம்பின்றி தள்ளி வைப்பது , ஹிஜாப் பிரச்சனையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு . அதில் உடனடி தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பது போன்றவை நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாகவுள்ளது. எனவே, நீதிபதிகள் அரசியல் சட்டப்படி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமையினை மதச்சார்பற்ற கோட்பாடுகளின் அடிப்படையிலும், பாரபட்சமின்றி நியாயமான முறைகளில் தீர்ப்பளிக்க காண வேண்டுமென்று இம்மாநாடு கோருகிறது. தமிழக மக்களின் மத சகிப்புத் தன்மை மற்றும் மக்கள் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு சாதகமாக ஒரு சில காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் செயல்படுவது சரியல்ல.
எனவே தமிழக அரசு இத்தகைய அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதோடு தமிழகத்தின் மக்கள் ஒற்றுமை பாரம்பரியத்தைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவும், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை வகுப்புவாத செயல்கள் தலைகாட்டும் போது, உடனடியாக பாரபட்சமற்ற, நேர்மையான நடவடிக்கைகள் மூலம் அத்தகைய போக்குகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறது. தமிழகத்தில் தண்டனை காலம் முடிந்தும் வழக்கு விசாரணை துவங்காமலும், பல்லாண்டுகளாக விசாரணை முடியாமலும் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதில் , மதப்பாகுபாடு கடைப்பிடிக்கப்பட கூடாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.