புதுடெல்லி: ‘பதவியில் இருந்து ஓய்வு பெறும் எம்பி.க்கள் தங்கள் அனுபவத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்,’ என்று பிரதமர் மோடி பேசினார். முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, ஜெயராம் ரமேஷ் உட்பட 72 பேர் அடுத்தடுத்து ஜூலைக்குள் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு மாநிலங்களவையில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அவர்களை பாராட்டி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், புதிய சட்டம் அல்லது கொள்கைகளை வகுக்கும்போது மக்களின் எதிர்பார்ப்புகள், ஆசைகள் அதில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கடந்த 2017ம் ஆண்டு முதல் இதுவரையில் நடந்த அவை கூட்டங்களில் 35 சதவீதம் அமளியால் பாதிக்கப்பட்டது. ஓய்வு பெறும் உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவகாரங்களில் அதிக அனுபவம் பெற்றவர்கள். பெரும்பாலான உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டது இல்லை,’’ என்றார். பிரதமர் மோடி பேசுகையில், ‘‘ஓய்வு பெறும் உறுப்பினர்கள் தங்கள் அனுபவத்தை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். அனுபவம் வாய்ந்த இவர்களின் இடத்தை தற்போதைய எம்பிக்கள் பூர்த்தி செய்ய வேண்டும். பதவிக்காலம் முடியும் நமது எம்பி.க்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும். சில நேரங்களில் கல்வி அறிவை விட அனுபவ அறிவு வலிமை மிக்கதாக இருக்கும். பதவிக் காலத்தை நிறைவு செய்யும் எம்பி.க்கள் மீண்டும் எம்பி.யாக அவைக்கு வர வேண்டும்,’’ என்றார்.
