மும்பை,-மஹாராஷ்டிராவில், கட்டாய முக கவசம் உட்பட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் இன்றுடன் முடிவுக்கு வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில், கொரோனா பரவலின் போது, மாநிலம் கடும் பாதிப்புகளை சந்தித்தது. குறிப்பாக மும்பையில் தொற்று பரவல் அதிகரித்தது. இதையடுத்து அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், மஹாராஷ்டிராவில் நேற்று முன் தினம் 119 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது.
இருவர் உயிரிழந்தனர். தற்போது 939 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதில் கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபி கூறியதாவது:மராத்தி புத்தாண்டு நாள் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் இருந்து மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. முக கவசம் அணிவது கட்டாயமில்லை. அவரவர் சுய விருப்பத்தின் அடிப்படையில் அணிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement