திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்பட இருந்த சிறப்பு தரிசன டோக்கன்கள் வரும் 8ம் தேதி முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள அறிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏப்ரல் மாதத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கான சிறப்பு வரிசையில் அனுமதிக்க டோக்கன்கள் ஏப்ரல் 8ம் தேதி காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும், தேவஸ்தான மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏப்ரல் 1ம் தேதிக்கு வழங்கப்படுவது ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 1000 டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன் பெற்றவர்கள் 9ம் தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது. டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* அங்கப்பிரதட்சணத்துக்கு டோக்கன் ஒத்திவைப்புதிருப்பதியில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் டோக்கன் வழங்குவது ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளது. எனவே, 2ம் தேதி திருமலையில் உள்ள பிஏசி-1ல் உள்ள 2 கவுன்டர்களில் தினமும் 750 டோக்கன்கள் வழங்கப்பட்டு, மறுநாள் அதிகாலை அங்கப் பிரதட்சணம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளிக் கிழமைகளில் ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவதால், வியாழக்கிழமை டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்படுகிறது.