புதுடில்லி:போலியாக 1,000 கோடி ரூபாய்க்கு செலவுக் கணக்கு காட்டியதாக கூறப்படுவதை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் மறுத்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த ஹீரோ மோட்டோ கார்ப்., நிறுவனம் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ‘இந்நிறுவனம் போலி ஆவணங்கள் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் செலவுக் கணக்கு காட்டியதை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது’ என, ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியானது.இதையடுத்து ஹீரோ மோட்டோ நிறுவன பங்கு விலை நேற்று முன்தினம், 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.
இது குறித்து, இந்நிறுவனத்திடம் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ விளக்கம் கேட்டது. இதற்கு இந்நிறுவனம் செபிக்கு அனுப்பிய விளக்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த வாரம் வருமான வரித் துறையினர் எங்கள் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இதற்கு நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்தது; இனியும் அளிக்கும்.
இந்நிலையில் போலி ஆவணங்கள் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் செலவுக் கணக்கு காட்டிய தாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு ஆதாரமாக எந்தவொரு ஆவணங்களும் வெளியிடப்படவில்லை. ஊகத்தின் பேரில் எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை நிறுவனம் மறுக்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இந்த விளக்கத்தை தொடர்ந்து ஹீரோ மோட்டோ கார்ப் பங்கு விலை, 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.
Advertisement