புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ரூ.3,887 கோடி செலவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 15 இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், விமானப்படைக்கு 10 ஹெலிகாப்டர்களும், ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உட்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்காக ரூ.377 கோடி ஒதுக்கவும் அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கிறது. சீனாவுடனான எல்லை பிரச்சனை உட்பட பல்வேறு பாதுகாப்பு சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த திறன்களையும் மேம்படுத்துவதில் முப்படைகள் கவனம் செலுத்தும் நிலையில், ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவம் மற்றும் விமானப்படையின் தேவைகளை எதிர்கொள்ள இது முக்கியமான நடவடிக்கையாகும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.