`வட சென்னை முதல் குதிரைவால் வரை'- சமகால சினிமாக்களில் கலையும் எம்.ஜி.ஆரின் பிம்பங்கள்! விரிவான அலசல்

எம்.ஜி.ஆர் சினிமா, அரசியல் இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். ‘நாயகன்’ என்னும் சொல்லுக்கான முழுப்பரிமாணங்களை உடையவர். எம்.ஜி.ஆர் இறந்து பல ஆண்டுகள் ஆனபிறகும் ‘அவர் இறக்கவில்லை’ என்று நம்பிய சிலர் இருக்கத்தான் செய்தார்கள். இப்போதும்கூட எம்.ஜி.ஆர் சமாதியில் காதுவைத்து, அவர் கைக்கடிகாரத்தின் சத்தம் கேட்கிறதா என்று கேட்கும் சடங்கு தொடரத்தான் செய்கிறது.

எம்.ஜி.ஆர் பிம்பங்களால் கட்டப்பட்டவர். எம்.ஜி.ஆரைப் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. அவர் வள்ளலாக இருந்து உதவிய நேர்மறைக் கதைகளில் இருந்து சினிமாவில் அவர் பழிவாங்கிய நடிகர்களின் பட்டியல் என்று நீட்டப்படும் எதிர்மறைக் கதைகள் வரை ஏராளமான கதைகள் இன்னும் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் எதில் உண்மையின் சாயல் இருக்கிறது என்று நாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கதைகள் நீளமானவை.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் தன் பிம்பங்கள் குறித்து தெளிவுடன் இருந்தார். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு முன் இவ்வளவு தெளிவுடன் யாரும் இருந்ததில்லை என்றும் சொல்லலாம். தனக்குப் பின் பல ஆண்டுகளுக்கு வரப்போகும் நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவர் இந்த விஷயத்தில் முன்னுதாரணம். தான் நடிக்கும் ஒரு காட்சியின் கேமரா கோணம் எப்படி வைக்கப்பட வேண்டும் என்பதிலிருந்து தன் படத்தின் பாடல் வரிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதுவரை அவர் கவனமாக இருந்தார். நடுத்தர வயதைத் தொடும் காலகட்டத்தில்தான் அவருக்கு சினிமா நுழைவு வாய்ப்பு கிடைத்தது. அவர் உச்சத்தை எட்டும்போது பின் அந்திக்காலங்களில் இருந்தார். தன் வயதும் சுருக்கங்களும் தெரியாத அளவுக்கு தன் பிம்பங்களைப் பேணினார். வயதாக ஆக, மிக இளம் நடிகைகளுடன் காதலும் கவர்ச்சியும் ததும்ப நடித்து அதைச் சமன்படுத்த முயன்றார். எம்.ஜி.ஆருக்கு எவ்வளவு தூரம் வயதானதோ அவருடன் நடிக்கும் கதாநாயகிகளின் வயது அந்தளவுக்கு குறையத் தொடங்கியது.

தி.மு.க.வின் முக்கிய முகமாக இருந்து பின் அ.தி.மு.க.வைத் தொடங்கிப் பத்தாண்டுகள் முடிசூடா மன்னனாக இருக்க அவருக்கு உதவியவை அவர் கட்டமைத்த பிம்பங்களே. எம்.ஜி.ஆர் என்றால் தொப்பியும் கண்ணாடியும்தான். பிம்பங்கள் மூலம் எம்.ஜி.ஆர் தன்னை உருவாக்கிக்கொண்ட கதையை விமர்சனபூர்வமாக முன்வைத்த நூல் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் ‘The Image Trap: M G Ramachandran in Films and Politics ‘. தமிழில் ‘பிம்பச்சிறை’ என்று மொழிபெயர்க்கப்பட்டது. இப்போதுவரை சினிமாவில் இருந்து அரசியலுக்கு நுழைய முயலும் எந்த நடிகருக்கும் எம்.ஜி.ஆரே முன்னுதாரணம். விஜயகாந்த் முதல் விஜய் வரை. நடிப்பில் சிவாஜியைப் பின்பற்றிய கமல்ஹாசனே அரசியலில் தன்னை எம்.ஜி.ஆரின் வாரிசாக முன்னிறுத்த முயல்கிறார். அரசியலில் ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ முதல் ‘காவி எம்.ஜி.ஆர்’ வரை வண்ணமயமான எம்.ஜி.ஆர் அணிவகுப்பைக் காண்கிறோம்.

எம்.ஜி.ஆர் – கருணாநிதி

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தின்போது வெளியான தமிழ் சினிமாக்களிலும் எம்.ஜி.ஆர் குறித்த போற்றிப்புகழ்தல்களே அதிகம். குறிப்பாக சத்யா மூவீஸ் தயாரிப்பு படங்களில் இருந்து பாக்யராஜ், கங்கை அமரன் படங்கள் வரை எம்.ஜி.ஆர் ஏழைப்பங்காளராகவே முன்னிறுத்தப்பட்டார். சிலகாலம் சத்யராஜ் எம்.ஜி.ஆரைப் போலவே நடனமாடி விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தார். ராமராஜனைப் பற்றி சொல்லவே வேண்டாம். கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய படங்கள், டி.ராஜேந்தர் படங்கள், எஸ்.ஏ.சந்திரசேகர் படங்கள் போன்ற மிகச்சில படங்களில்தான் எம்.ஜி.ஆர் குறித்த விமர்சனம் – அதுவும் மறைமுகமாக இருந்தது. ஆனால் பல ஆண்டுகாலத்துக்குப் பிறகு சமீபத்திய தமிழ் சினிமாக்களில் எம்.ஜி.ஆரைச் சுற்றி கதைக்களம் பின்னப்படுவதும் அதுவும் எம்.ஜி.ஆர் விமர்சனபூர்வமாக அணுகப்படுவதும் ஆச்சர்யம்தான்.

அரசியல் கட்சிகளின் நேரடியான சித்திரிப்பு மலையாள சினிமாக்களில் அதிகம். துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சல்யூட்’ வரை ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் தமிழில் அப்படியான ஒரு வழக்கமே கிடையாது. அதை முதலில் உடைத்தது வெற்றிமாறனின் ‘வடசென்னை’. எம்.ஜி.ஆர் ரசிகரான மீனவர் ராஜன் (அமீர்), மீனவர்கள் தங்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்துப்போராடுகிறார். வெளியேற்றப்படுவதற்குக் காரணம் அ.தி.மு.க அரசியல்வாதியான முத்து (ராதாரவி).

வட சென்னை திரைப்படத்தில்

எம்.ஜி.ஆர் இறந்தபிறகுதான் இது நடைபெறுவதாகக் காட்டப்பட்டாலும் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலமான 1985ல் மெரினாவை அழகுபடுத்துவது என்ற பெயரில் மீனவர்களை அப்புறப்படுத்தும் முயற்சிகள் நடந்தன என்பதும் அதை எதிர்த்து மீனவர்கள் போராட்டம் நடந்தபோது காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் ஐந்துபேர் உயிரிழந்தனர் என்பதும் வரலாற்று நிதர்சனம். ‘படகோட்டி’யாகவும் ‘மீனவ நண்பனாக’வும் நடித்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில்தான் மீனவர்கள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்; துப்பாக்கிச்சூடு நடத்திக் கொல்லப்பட்டனர்.

எம்.ஜி.ஆர்.

ஏழை மக்களின் காவலனாகவும் பண்ணையார்களையும் முதலாளிகளையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்த்துப் போராடும் ரட்சகனாவும் தன் படங்களில் மீண்டும் மீண்டும் நடித்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் அவர் ஆட்சிக்காலத்தில்தான் நிலப்பிரபுக்களையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்த்த நக்சல்பாரி இயக்கத்தினர் வேட்டையாடப்பட்டனர். நர்சரிப்பள்ளிகளுக்கான விதை எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில்தான் விதைக்கப்பட்டது. சுயநிதிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. சாராய வியாபாரிகளில் பலர் ‘கல்வித்தந்தை’ ஆனார்கள். சினிமாவில் ‘திராவிடம்’ பேசிய எம்.ஜி.ஆர், மத்திய அரசின் நெருக்கடியால் தன் கட்சியின் பெயரில் ‘அகில இந்திய’த்தைச் சேர்த்தார்.

வெற்றிமாறனின் ‘வடசென்னை’ எம்.ஜி.ஆர் பிம்பத்தின்மீது முதல் கல்லை வீசியது என்றால் பா.இரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’யோ எம்.ஜி.ஆர் பிம்பத்தின் மீது மாபெரும் விரிசலை ஏற்படுத்தியது. ‘சார்பட்டா பரம்பரை’க்கு குருவாக இருந்து குத்துச்சண்டைப் பயிற்சி அளிக்கும் ‘திராவிட வீரன்’ ரங்கன் வாத்தியார் (பசுபதி), தீவிரமான தி.மு.க.காரர். மிசா கைதியாகச் சிறைக்குச் செல்பவர். அவர் சிறையில் இருக்கும் காலத்தில் அவரது மகன் வெற்றிச்செல்வன் (கலையரசன்), எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வில் இணைகிறார். சாராயம் ஆறாக ஓடுகிறது. ரங்கன் வாத்தியாரின் மகன் குடிக்கு அடிமையாவதுடன் ரங்கன் வாத்தியாரின் சீடன் கபிலனையும் (ஆர்யா) குடிக்கு அடிமையாக்குகிறான். குடும்பம் சீரழிகிறது; குத்துச்சண்டை வீரர்களின் உடற்கட்டும் அழிகிறது.

சார்பட்டா பரம்பரை

திரைப்படத்தில் குடிக்கு எதிரான முழக்கங்களை முன்வைத்தவர் எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன் நடிப்பதற்கு சாத்தியமான வெவ்வேறு பாத்திரங்களைப் பரிசோதித்துப் பார்த்தபோதும் எம்.ஜி.ஆர் குடி, புகைப்பழக்கமில்லாத, ஏழைமக்களை மீட்கும், தாயை உயிரினும் மேலாக மதிக்கும், வில்லன்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் நாயகிகளைக் காப்பாற்றும், இரண்டு பெண்களால் காதலிக்கப்பட்டு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் நாயகனாகவே நடித்தார். ஆனால் அவர் கட்சிக்காரர்களே சாராயம் விற்றதையும் சாராயம் குடித்ததையும் விமர்சனபூர்வமாகக் காட்சிப்படுத்தியது ‘சார்பட்டா பரம்பரை’. மேலும் அநீதிக்கு எதிராக சினிமாவில் போர்க்குரல் எழுப்பிய எம்.ஜி.ஆர், எதார்த்தத்தில் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த எமெர்ஜென்சியை ஆதரித்ததையும் முன்வைத்தது.

இந்த இரண்டு படங்களும் யதார்த்தவாத சித்திரிப்பின் மூலம் எம்.ஜி.ஆரின் பிம்பங்களைக் கலைத்தது என்றால் மேஜிக்கல் ரியலிச கதைசொல்லல் மூலம் எம்.ஜி.ஆரின் பிம்பங்களைக் கலைத்தது, சமீபத்தில் வெளியான ‘குதிரைவால்’ திரைப்படம்.

நாயகன் சரவணனின் கனவில் வால் இல்லாத ஒரு குதிரை வருகிறது. எழுந்து பார்த்தால் சரவணனுக்கு குதிரைவால் முளைத்திருக்கிறது. அது ஏன் முளைத்திருக்கிறது, கனவுக்கான காரணம் என்ன என்று தேடிச்செல்லும் பயணமே ‘குதிரைவால்’. ஒருகட்டத்தில் கனவில் சரவணன் எம்.ஜி.ஆர் குரலில் பேசுகிறான். பின்னணியில் எம்.ஜி.ஆர் இறந்த செய்தி சொல்லப்படுகிறது.

குதிரைவால் படத்தில்

‘அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்….இதோ இந்த அலைகள்போல ஆடவேண்டும்’ என்ற ‘ஆயிரத்தில் ஒருவன்’ எம்.ஜி.ஆர் பாடல் படம் முழுக்க மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. இறுதியில் பறவைகளாகத்தான் சரவணனும் அவன் பால்யகாலக் காதலி நீலியும் பறக்கிறார்கள். இடையில் அதே பறவை ஜன்னலுக்கு அருகில் சிறகடிக்கிறது. அலையின் சத்தத்தை பாபு என்ற நண்பர் கொடுக்கும் சிப்பியின் மூலம் கேட்கிறான் பிராய்ட் என்கிற சரவணன்.

ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரின் ‘நான் ஆணையிட்டால்’ பாடல் தலைகீழாக்கப்பட்டு ஒரு கேலிச்சித்திரமாக்கப்படுகிறது. தொலைக்காட்சியில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் குதிரையின்மீது பயணித்தபடி ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடலைப் பாடுகிறார்கள். ‘குதிரை என்பது காமத்தின் குறியீடு’ என்று கணித ஆசிரியர் விளக்குகிறார்.

பாபு என்ற நண்பரோ Image, Mirror Image, Reflextion குறித்து விளக்கும் காட்சி படத்தில் வருகிறது. Image என்பது வெறுமனே கண்ணாடியில் விழும் பிம்பம் மட்டுமல்ல. சமூகப்பொதுத்தளத்தில் Image என்பதன் அர்த்தம் கூடுதல் பரிமாணங்களைக் கொண்டது. அந்தவகையில் தன் இமேஜைக் கடைசிவரை காப்பாற்றி பிம்பங்களால் வாழ்ந்த எம்.ஜி.ஆரும் ஒரு பாத்திரமாக உள்வாங்கப்படுகிறார்.

தன் கனவுக்கான காரணத்தை சரவணன் என்கிற பிராய்ட் தேடிச்செல்லும்போது அவன் தன் பால்யத்தைச் சென்றடைகிறான். அங்கே பாலுறவு நடைபெறாமலே கனவின் மூலம் கர்ப்பமான தன் சகோதரியை, அவன் தந்தை வசைபாடுகிறார். கன்னித்தாய் – ஏசு பிறப்பு குறித்த கதையை ஒரு பாத்திரம் விளக்குகிறது. ‘கன்னித்தாய்’ எம்.ஜி.ஆர் நடித்த படம். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரத்தின் பெயரும் சரவணன்.

குதிரைவால் படக்காட்சி

‘குதிரைவால்’ படத்தில் அந்தக் காட்சி முழுவதும் ஒரு வழக்கமான தமிழ் சினிமாவின் நாடகியக் காட்சியாகவே நடைபெறுகிறது. அப்பன் பெயர் தெரியாத குழந்தை, கற்பின் முக்கியத்துவம் ஆகியவை அழுகை, வசைபாடலின் மூலம் சொல்லப்படுகிறது. திராவிட இயக்க சினிமாக்கள் எவ்வளவோ முற்போக்கான அம்சங்களைக் கொண்டிருந்தபோதும் கற்பு, ஆணாதிக்கம் ஆகியவற்றில் பிற்போக்கான கருத்துகளையே முன்வைத்தன. அவற்றில் ஆகமோசமான சினிமாக்கள் எம்.ஜி.ஆர் சினிமாக்கள்தான். ‘இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை’, ‘பொம்பளை சிரிச்சாப்போச்சு’ என்று மீண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர் தன் சினிமாக்களில் பெண்களுக்கான ஆணாதிக்க வரையறைகளை முன்வைத்தார். ‘படித்த பெண்களின் திமிரை’ அடக்குவதையே முழுநேரக் கடமையாகவும் கொண்டிருந்தார். பின்னாட்களில் தமிழ் சினிமாக்களில் ‘சேலைமேல முள்ளு விழுந்தாலும்…’ போன்ற ‘தத்துவப் பொன்மொழி’களின் மூலவர் எம்.ஜி.ஆர்தான். ‘அதிகமா கோபப்படுற பொம்பளையை’ச் சாடும் ‘படையப்பா’ ரஜினியின் ரோல்மாடலும் அவரே. இவை எல்லாவற்றையும் ‘குதிரைவால்’ காட்சி எள்ளலுடன் விமர்சனபூர்வமாக முன்வைக்கிறது.

அடுத்த காட்சியில் அந்த ‘கன்னித்தாய்’ இறந்துபோகிறாள். அதேநேரத்தில் எம்.ஜி.ஆரின் மரணச்செய்தியும் அறிவிக்கப்படுகிறது. ஊரே கூடி ஒப்பாரி வைக்கிறது. அந்தக் கூட்டத்தில் சிலர் ‘எம்.ஜி.ஆர் சாகவில்லை’ என்று சாதிக்கிறார்கள். எம்.ஜி.ஆர் சாகும்போது கேட்கும் ஒப்பாரி ஓசை அதற்கு முந்தைய காட்சியிலும் ஒலிக்கிறது. அப்போது வானவில் பாதை வழியாக ஒரு கிழவியைத் தேடிவருகிறான் சரவணன். கிழவியோ ‘நம்பியார் இருக்கும்வரை எம்.ஜி,ஆர் இருப்பார்’ என்று அரக்கன் கதை சொல்கிறாள்.

பால்யகாலக் கதையில் கிணற்றில் யாரோ விழும் சத்தம் கேட்கிறது. சரவணனும் நீலியும் பார்த்தால் தொப்பியும் கண்ணாடியும் மிதக்கிறது. கிணற்றின் படிக்கட்டில் ஒரு டம்ளர் நீரில் ஒரு தோட்டா மிதக்கிறது.

குதிரைவால் படக்காட்சி

எம்.ஜி.ஆர் என்ற அதிசாகச நாயகனின் இமேஜ் மீது எறியப்பட்ட முதல் பந்து, அந்தக் கண்ணாடியில் விழுந்த முதல் விரிசல், வில்லன் நடிகரான நடிகவேள் எம்.ஆர்.ராதா சுட்ட துப்பாக்கித் தோட்டா. இதில் எம்.ஜி.ஆர் தொண்டையில் துளைத்த தோட்டாவை தனி டம்ளரில் வைத்துவிட்டு கிணற்றுக்குள் குதித்து தொப்பியும் கண்ணாடியுமாக மிதக்கிறார். இறுதியில் சிறுவன் சரவணனும் சிறுமி நீலியும் எம்.ஜி.ஆரின் இமேஜான தொப்பியையும் கண்ணாடியையும் தங்கள் பக்கம் இழுக்க முனைகிறார்கள். எம்.ஜி.ஆராக மாற முயலும் விளையாட்டு இன்னும் தமிழ்க்கனவு நிலத்தில் தொடரத்தான் செய்கிறது. எம்.ஜி.ஆரின் தொப்பியையும் கண்ணாடியையும் இருவரும் தங்கள் பக்கம் இழுத்தவுடன் பறவைகளாக மாறிப்பறக்கிறார்கள். ‘அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்’ என்ற பாடல் தனக்கான அர்த்தத்தைப் பெறுகிறது.

‘குதிரைவால்’ திரைப்படம் சாதாரணப் பார்வையாளர்களுக்கானதல்ல. ஆனால் கொஞ்சம் முயன்றால் அது எம்.ஜி.ஆர் மீதும் அவர் பிம்பங்கள்மீதும் முன்வைக்கும் நுட்பமான விமர்சனங்களைப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு காத்திரமான கலைப்படைப்பு விமர்சனத்தைத் தனக்குள் கொண்டே உருவாகிறது. அது தனக்கு முன் கட்டமைக்கப்பட்ட புனிதப்பிம்பங்களின் மீது கேள்வியெழுப்புகிறது. சார்லி சாப்ளின் முதல் திராவிட இயக்க சினிமாக்கள்வரை விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்ததால்தான் அரசியல் முக்கியத்துவம் உருவாகிறது. அப்படித்தான் ‘வடசென்னை’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘குதிரைவால்’ ஆகிய படங்கள் எம்.ஜி.ஆரின் புனிதப்பிம்பங்களைக் கலைக்கின்றன. எல்லாக் காலகட்டங்களிலும் அதற்கு முந்தைய புனிதப்பிம்பங்கள் தகர்க்கப்படுவதும் தலைகீழாக்கப்படுவதும்தான் காலத்தின் இயல்பு. அந்தவகையில் தமிழ் சினிமாவில் இது ஒரு வரவேற்கத்தக்க நகர்வு என்று சொல்லலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.