சியோல்-உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பி, தென் கொரியா சாதனை படைத்துள்ளது.
கிழக்காசிய நாடுகளான தென் கொரியா – வட கொரியா இடையே எப்போதும் பனிப்போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி, வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த வாரம், அந்நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
இதனால், வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க, ஐ.நா., சபையிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகள், நிலைகளை தெரிந்து கொள்ள, தென் கொரியாவிடம் ராணுவ உளவு செயற்கைக்கோள்கள் இல்லை. அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை நம்பியே உள்ளது.
எனவே, ராக்கெட்கள் தயாரித்து, அதன் வழியாக செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப தென் கொரியா திட்டமிட்டது.இதையடுத்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை, தென் கொரியா நேற்று வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. திட எரிபொருள் கொண்ட இந்த ராக்கெட், போலி செயற்கைக்கோள் ஒன்றை,விண்வெளியில் நிலைநிறுத்தும் புகைப்படங்களையும் தென்கொரியா வெளியிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அந்நாட்டு ராணுவ அமைச்சர் சுக் வுக் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.பின், சுக் வுக் இது பற்றி கூறுகையில், ”ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ராக்கெட் வழியாக, உளவு செயற்கைக்கோள்களை அனுப்புவோம்,” என்றார்.
Advertisement