விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேரில் இருவரை குற்றம் நடந்த குடோனுக்கு அழைத்துவந்து சிபிசிஐடி போலீஸார் இன்று (மார்ச் 31) காலை விசாரணை மேற்கொண்டனர்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், அவரது நண்பர்களான திமுக நிர்வாகி ஜூனத்அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகியோரும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் மதுரை மத்திய சிறையிலும், சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் சிபிசிஐடி போலீஸார், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 நாள்கள் விசாரணை நடத்தினர். அதோடு, கைதுசெய்யப்பட்ட 8 பேரின் வீடுகள் மற்றும் சம்பவ நடந்த இடங்களிலும் சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் 7 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நேற்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மற்றும் ஜூனத் அகமது ஆகியோரை சம்பவம் நடந்த மருந்து குடோனுக்கு நேரில் அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி வினோதினி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்ட சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், விரைந்து தண்டனை வழங்குவதில் இந்த வழக்கு இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கும் என்றும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.